"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/1/17


"பொங்கல் திருநாளில் சூரியனையும் மாட்டையும் வணங்கி படையல் வைக்கப்படுவதனால், அதைக் கொண்டாட முடியாது" என காரணம் கூறுபவர்களிடம் ஒரு கேள்வி;

சுதந்திர தினத்தில், இந்திய வரைபடத்துக்கு பாரதமாதா உருவம் கொடுத்து மாலையிட்டு வணங்கி வந்தே மாதரம் பாடப்படுவதால், சுதந்திர தினமும் கொண்டாட மாட்டீர்களா?

"இந்தியாவுக்கு பாரதமாதா உருவம் கொடுப்பதனால், இந்தியத் திருநாள் கொண்டாட்டங்களில் இருந்து விலகி நிற்போம்" என யாரும் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால், அது 'இந்து இந்தி இந்தியா' என முழங்கும் ஆர்.எஸ்.எஸ்.க்குத்தான் வலு சேர்க்கும்.

அதுபோல், பொங்கலில் மதச் சடங்குகள் புகுந்துள்ளதை காரணம் காட்டி, தமிழர் திருநாள் கொண்டாட்டங்களிலிருந்து விலகி நிற்போம் எனச் சொன்னால், 'நீங்கள் தமிழர் இல்லை' என்று பரப்பும் மதவெறி சக்திகளுக்குத்தான் அது வலு சேர்க்கும்.

சுதந்திர தினம், குடியரசு தினம் கடைபிடிப்பது, கொடிக்கு சல்யூட் அடிப்பது, எழுந்து நிற்பது, கீதம் பாடுவது, இனிப்பு வழங்கி கொண்டாடுவது இதெல்லாம் செய்வது எந்த அடிப்படையில்?
ஒரு நாட்டுக்கான பண்பாடு கூடும் எனில், ஒரு மாநிலத்துக்கான பண்பாடு கூடாதா?

அறுவடையில் மகிழ்வதும், அறுத்த பயிரை பொங்கல் வைத்துப் பகிர்வதும், ஊர் கூடி விளையாடுவதும் தமிழர் பண்பாடு. இதை செய்வதில் எங்கே வந்தது கொள்கை இழப்பு?

பாரதமாதாவாக இந்தியாவை வணங்குவது அவர்களின் வழக்கம் என அதை கழித்துவிட்டு, நாம் இந்திய நாளைக் கொண்டாடுவதில்லையா? அதுபோல், படையல் வைப்பது அவர்களின் வழக்கம் என கழித்துவிட்டு தமிழர் நாளைக் கொண்டாடுவதில் என்ன சிக்கல்?

அடிப்படையில், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதுபோல், பொங்கலும் மதச்சார்பற்ற பண்பாடு. அதை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும் நம் நிலைப்பாடு. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதச் சார்புக்கு எப்படி முன்னுரிமை இல்லையோ, அப்படியே தமிழர் பண்பாட்டிலும் இல்லை. மதங்களையும் சடங்குகளையும் கடந்தது பொங்கல்.

எல்லோரும் கொண்டாடுவோம்.
பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்."பொங்கல் மதப் பண்டிகை அல்ல. அது அறுவடைத் திருநாள். அதை பெரும்பான்மையாகக் கொண்டாடும் இந்து மக்கள் தமது வழிபாட்டுச் சடங்குகளோடு கொண்டாடுவதால், அதில் மதம் கலந்துவிட்டது. பொங்கலில் புகுந்துள்ள மதச் சடங்குகளை தவிர்த்து, அதை தமிழர் அனைவரும் கொண்டாட வேண்டும்" என்பது எனது கருத்து.

இதைச் சொல்வதோடு மட்டுமின்றி, சடங்குகள் அற்ற பொங்கல் விழாக்களில் பங்கேற்றும் வருகிறேன். அரசியலுக்கு வரும் முன்பே என் நிலைப்பாடு இதுதான். மதச் சடங்குகள் இல்லாத பொங்கலை பெரியார் அமைப்புகள், இடதுசாரித் தோழர்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் மதப் பண்டிகை எனில் அவர்களும் அதிலிருந்து விலகியே நிற்பார்கள்.

இங்கே பின்னூட்டம் செய்துள்ள பலரும், இது ஓட்டுப் பொறுக்குவதற்கான பதிவு என எழுதியுள்ளனர். எனது இந்த பேஸ்புக் பதிவை நினைவில் வைத்து, 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தேர்தலில் நான் நிற்கப்போகும் தொகுதியில் உள்ள பொதுமக்கள் எனக்கு ஓட்டுப்போடுவார்கள் என்பது, இன்றைய தேர்தல் அரசியல் போக்கில் மாபெரும் நகைச்சுவை.

மேலும், பலரும் சொல்லியிருப்பது, "பொங்கலின் நோக்கமே சூரியனுக்கும் மாட்டுக்கும் நன்றி சொல்லி வழிபடுவதுதான்" என்பது. அதுவெல்லாம் பொங்கலில் நுழைந்தவை என்று நான் சொன்னால், என்னை இணைவைப்பை ஆதரித்தவனாக சித்தரிக்கிறார்கள். இதோ இந்த வீடியோவில் 
(https://youtu.be/0Dx817Vsh80) பி.ஜே அவர்களே சொல்கிறார், 'பொங்கல் அறுவடைத் திருநாள் தான். மதச் சடங்குகள் அதில் பின்னால் நுழைந்துவிட்டன' என்று. மேலும், மதச் சடங்குகள் அற்ற, அறுவடையை மகிழ்வுடன் கொண்டாடும் பொங்கலில் ஆட்சேபனை இல்லை என்றும் சொல்கிறார். https://youtu.be/0Dx817Vsh80 இதைத் தானே நானும் சொன்னேன்.

மதச் சடங்குகள் இல்லாத வகையில் பொங்கலை கொண்டு வாருங்கள் என்பது பி.ஜேவின் வேண்டுகோள். யார் கொண்டுவருவார்கள்? இந்து மக்கள் அவர்கள் வழக்கப்படி அதை செய்யும் நிலையில், அந்த வழக்கத்தை மறுப்பவர்கள் தான் உண்மையான அறுவடைத் திருநாளை கொண்டுவர முடியும். அதைத்தான் பெரியார் இயக்கங்கள் செய்கின்றன.

மேலும், 'பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல' எனும் நபிமொழியை இங்கே பலரும் குறிப்பிட்டுள்ளார்கள். பொங்கல் சமயக் கலாச்சாரம் அல்ல என்பது தானே உண்மை. தமிழ்ச் சமூகம் உழவுச் சமூகம் எனும்போது, உழவு என்பது சாதி சமயங்களை கடந்த அனைத்து மக்களின் வாழ்வியல் எனும்போது, அறுத்த பயிரை பொங்கிப் பகிர்ந்து மகிழ்வது அனைவருக்கும் உரித்தான பண்பாடு தானே. இதில் சமயம் எங்கே வந்தது?

'என்றோ அறுத்தோம். மகிழ்ந்தோம். இன்று அறுவடை செய்கிறோமா? விவசாயமே நடக்காதபோது அறுவடைத் திருநாளா?' என்பதும் பலரின் கேள்வி. வெள்ளையனிடம் இருந்து என்றோ விடுதலை பெற்றோம். இன்று அதே வெள்ளையர்களும் பன்னாட்டு கம்பெனிகளும் அன்னிய முதலீடு எனும் பெயரில் இந்தியாவை சுரண்டி சூறையாடி ஆதிக்கம் செய்கின்றனர். மீண்டும் அவர்களின் கைகளுக்கே நாடு சென்றுவிட்டது. இப்போதும் சுதந்திர தினம் கொண்டாடுவது சரிதானா? என்று நாம் கேட்பதில்லை.

இதனால் சமூக வலைதளத்தில் முஸ்லீம்களின் கருத்து வருத்த உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ரம்ஜானையும் பக்ரீத்தையும் தான் முஸ்லிம்களுக்கு திருநாளாக அறிவித்திருக்கிறார்கள். இது அல்லாத வேறு பெருநாள் முஸ்லிம்களுக்கு கிடையாது. என பல்வேறு கருத்துக்கள் குவிந்துள்ளன.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.