"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/12/16

அடுத்தவர் குறைகளை ஆராய்வதில் பகிரங்கப் படுத்துவதில் நீதிபதிகள் ஆகும் மனிதர்கள், தமது பலவீனங்களை நியாயப்படுத்துவதில், மறைப்பதில் வக்கீல்கள் ஆகின்றனர்.

அடுத்தவர் பலவீனங்களில் வக்கீல்களாகவும், தமது குறைகளில் நீதிபதிகளாகவும் ஒருகணம் இருந்து பார்த்தால் மனித வாழ்வின் யதார்த்தங்கள் பல புரியும். 

மனிதர்களை அவர்களிடமுள்ள பலத்தோடு மாத்திரமல்ல பலவீனங்களோடும் அங்கீகரிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் பலத்திற்குள்ள அங்கீகாரம் பலவீனங்களிற்கு வழங்கப்படல் வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது, சாதகமான பக்கங்களிற்கு ஊக்குவிப்பும் பாதகங்களான அம்சங்களுக்கு நிராகரிப்பும் வாழ்வில் ஒரு சமநிலையை தோற்றுவிக்கும்.

"இறைவா எங்கள் பாவங்களை குறைகளை குற்றங்களை மன்னித்து அருள்வாயாக, அவற்றை மறைத்து விடுவாயாக, இன்மையிலும் மறுமையிலும் அவற்றை வைத்து எங்களை இழிவு படுத்தி விடாதே..."

என்ற இறைஞ்சுதல்கள் எமக்குரியவை தான். சுவர்க்கமும் நரகமும் நன்மையையும் தீமையும் செய்கின்ற மனிதர்களுக்கு உரியவைதான்.
பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் பரஸ்பரம் உபதேசம் செய்து கொள்வதற்கும், நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொள்வதற்கும், நன்மையான விடயங்களில் நாம் முந்திக் கொள்வதற்கும், மன்னிப்புக் கோருவதற்கும், விட்டுக் கொடுப்பதற்கும் ஒருவருக்கு ஒருவர் நல்லுறவு அவசியமாகும்.

சுவர்க்கத்திற்கு அடுத்தவரையும் அழைத்துச் செல்வதற்கும், நரகில் இருந்து எல்லோரையும் காப்பாற்றுவதற்கும் முயற்சிப்பதே நமது  பணி. அவற்றை தீர்மானிக்கும் நீதிபதிகளாக இருப்பதற்கு அதிகாரம் வழங்கப் படவில்லை.
உடல் ரீதியாக ஊனமுற்றோர் மீது விஷேட தேவையுடையோர் என பரஸ்பரம் அன்பும் அனுதாபமும் காட்டுவது போல் உளரீதியாக ஊனமுற்றோர் மீதும் அன்பும் அனுதாபமும் கொண்டு இயன்றவரை அவர்களையும் நல்வழிப்படுத்த முனைவதே ஒரு விசுவாசியின் பண்பாக இருக்க முடியும்.

அறிவு ரீதியாகவும் ஆற்றல்கள் ரீதியாகவும், பணம், பொருள் செல்வம், செல்வாக்கு ரீதியாகவும் மனிதர்களை அவர்களது புறநிலை பரிமாணங்களில் சமூக வாழ்வில் வகைப் படுத்துவது எவ்வாறு தவறானதோ அதேபோன்றே குறம் குறைகளை மையப்படுத்தி பலவீனங்களை மறைக்கத் தெரியாத கையாளத் தெரியாத பலரை அவற்றை கையாளவும் மறைக்கவும் தெரிந்த சிலர் மேதாவிகள் போல் வகைப்படுத்துவதும் தவறானதாகும்.
தனி நபர்களாகவும் குழுக்களாகவும் சமூகங்களாகவும் தேசங்களாகவும் இந்த அடிப்படை உண்மைகள் உணரப்படும் பொழுதே சமாதானமும் சகவாழ்வும் நீதியும் நியாயமும் நிலைத்து நிற்கும்.

குற்றச் செயல்களை குறைப்பதற்காகவே தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன, மனிதர்களை குற்றுயிராக்குவதற்கும், கொன்று குவிப்பதற்கும் அல்ல, ஷரீஅத் குற்றவியல் சட்டங்கள் யாவும் விதிகள் என்பதனை விட... விதி விலக்குகள் என்றே கூற முடியும்...

எல்லா விதிகளுக்கும் விதி விலக்குகளும் உண்டு... கட்டுக் கோப்புகள் மீரப்படுவதற்காக அன்றி மென்மேலும் பலப்படுத்தப் படுவதற்காகவே மேலே சொல்லப்பட்ட சிந்தனைகள் கையாளப் படல் வேண்டும்.

- கலாநிதி ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹூதீன் (நளீமி)

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.