Mohamed Farook Mohamed Farook Author
Title: அரபு நாட்டில் தொழில்புரியும் ஒரு ஏழை சகோதரனுக்கு அவன் தங்கை எழுதிய கடிதம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பலவருடங்களாக தொழில்புரியும் ஒரு ஏழை சகோதரனுக்கு அவன் தங்கை எழுதிய உருக்கமான கடிதம். அன்புள்ள காக்காவுக்கு, காக்கா, உங்களுக்கும் எனக்...
பலவருடங்களாக தொழில்புரியும் ஒரு ஏழை சகோதரனுக்கு அவன் தங்கை எழுதிய உருக்கமான கடிதம்.

அன்புள்ள காக்காவுக்கு,

காக்கா,
உங்களுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் ஒரு வருடம்தான். ஆனால் எங்கள் நான்கு பெண்களோடு சேர்த்து ஒரே ஒரு ஆணாக வந்து பிறந்த உங்களை காக்கா என்று கூப்பிடுவதைவிட வேறு என்ன சந்தோசம் இருக்கிறது?

எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது உங்களிடமிருந்த அந்த பழைய சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு அடிக்கடி ஊர் சுற்றியதும், வாப்பா வந்து
“பொம்புளப் பிள்ளைய சைக்கில்ல ஏத்துவயா? ” என்று உங்களுக்கு திட்டியதும். இன்று எம் தந்தை எம்மோடு இல்லாவிட்டாலும் அவர் நினைவுகள் எம்மைவிட்டு மறையாது.

காக்கா நீங்கள் பெரிதாக படிக்கவில்லை. ஓ எல் பரீட்சையோடு படிப்பை நிறுத்திவிட்டு தொழில் செய்யத்தொடங்கினீர்கள். வாப்பாவுக்கு பின்னர் நீங்கள்தான் நமது குடும்ப சுமையை சுமந்தீர்கள். மூத்த ராத்தாவுக்கு வீடுகட்ட வேண்டும் என்பதற்காக பத்தொன்பது வயதிலேயே கட்டார் போனீர்கள். மூன்று வருடங்களில் எப்படியோ ஒரு வீட்டைக் கட்டி முடித்து ராத்தாவுக்கும் கல்யாணம் செய்துவைத்தீர்கள்.

பின்னர் இரண்டாவது ராத்தாவுக்கு வீடுகட்ட உங்களுக்கு நான்கு வருடம் எடுத்தது. கூடவே மௌலவியான நமது மச்சானுக்கும் நீங்கள்தான் மோட்டார் சைக்கிள் வாங்கிகொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் அவ்வருட விடுமுறைக்காக நாட்டிற்கு வரவுமில்லை.

காக்கா நீங்கள் இங்கே இருந்துசெல்லும்போது இருந்ததைவிட அழகாக இருப்பீர்கள் நாட்டிற்கு வரும்போது. அந்தநாட்டு சாப்பாடும் காலநிலையும் உங்களை வெள்ளையாகவும் அழகாகவும் ஆக்கியிருக்கலாம். அதைநினைத்து நான் அடிக்கடி எண்ணுவது, நானும் திருமணம் முடித்தபின் கணவரோடு வெளிநாடுசென்று வாழவேண்டும் என்று.
மூனாவது ராத்தாவ படிக்க சொல்லி அவட படிப்புக்கும் நீங்கதான் முழுசா செலவு செய்தீங்க. அவக்கு ஆசிரியை தொழில் கிடைத்ததும் அதிகமா சந்தோசப்பட்டதும் நீங்களாகத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாம அவக்கு படிச்ச மாப்பிள்ளைதான் எடுக்கனும் எண்டு மாப்பிள்ள பாத்தீங்க. நீங்க பாத்த மாப்பிள்ளை எல்லோரும் சாதாரண வீடு வேண்டாம் மாடி வீடுதான் வேண்டும் என்று அடம்பிடித்ததும் நீங்களும் ராத்தாவின் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ஐந்து வருடங்கள் நாட்டுக்கே வராமல் தொழில் செய்து மாடி வீடு கட்டி ராத்தாவுக்கு கல்யாணம் செய்து வைத்தீர்கள்.

அல்ஹம்துலில்லாஹ் இப்போது எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள் காக்கா.

காக்கா நமது வாப்பா இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருப்பாரா என்றுகூட சொல்லமுடியாது. அந்த அளவுக்கு நீங்கள் எங்களுக்கு செய்திருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ்.

காக்கா இப்படி எவ்வளவோ செய்த நீங்கள் இப்போதுகூட சளைக்காமல் உங்கள் ஆசை தங்கச்சி எனக்காக உழைக்கவேண்டும் எனக்கு வீடு கட்டவேண்டும் என்பதற்காக இன்னும் அதேநாட்டில் வாழ்கிறீர்கள்.

காக்கா, போதும் காக்கா. எங்களுக்காக நீங்கள் தோய்ந்தது போதும். நீங்கள் கட்டிய மாடி வீட்டில் யாரோ ஒருவர் சுகமாக வாழ, என்னுடைய காக்கா நீங்கள் பாலைவனப்புழுதியில் புரண்டது போதும். நீங்கள் கட்டிய வீட்டின் நாய்த்தின்னைகூட பெரிதாக இருக்கிறது உங்கள் அறையைவிட. நீங்கள் மச்சானுக்கு கட்டிக்கொடுத்தவீட்டில் இரண்டு படுக்கையறைகள் இருக்க அங்கே ஒரே படுக்கையை இரண்டுபேர் பகிர்ந்து கொள்கிறீர்கள்.

இத்தனை வருடங்களாக நீங்கள் வியர்வைசிந்தி உழைத்த உழைப்பு எல்லாம் எங்கே? யாருக்காக? வேண்டாம் காக்கா வேண்டாம். சீதனம் என்னும் சில்லறைக்காக தோய்ந்தது போதும் காக்கா.

எனக்கு வயதாகிறது என்பதை யோசித்து யோசித்து உங்கள் வயதை மறந்தேவிட்டீர்கள் காக்கா. காக்கா நீங்கள் எனக்கு மணமகன் தேடுகிறீர்கள். மணப்பெண் எனும்வகையில் எனது ஆசையையும் கொஞ்சம் கேளுங்கள்…

மாடி வீடு கட்டிக்கேட்கும் படித்தவன் எனக்கு மாப்பிள்ளையாக வேண்டாம். படிக்காவிட்டாலும் பரவாயில்லை அவன் பணத்திற்கு ஆசைப்படாதவனாக இருக்கவேண்டும். பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவன் பண்பில் ஏழையாக இருக்ககூடாது. பிச்சைக்காரனாக இருந்தாலும் பரவாயில்லை அவன் பிச்சை என்னும் சீதனம் கேட்காதவனாக இருக்கவேண்டும். காக்கா அப்படி இல்லை என்றால் கடைசிவரை உன் தங்கையாகவே இருந்துவிட்டுப்போகிறேன்.

அல்லாஹ்வுக்காக சீதனம் என்னும் சில்லறைக்கு ஆசைப்படும் எவனையும் எனக்கு திருமணம் செய்து தந்துவிடாதே காக்கா. நீங்கள் என்மேல் கொண்ட அன்பு உண்மையென்றால் என் ஆசையை நிறைவேற்றுங்கள். இல்லையேல் என்னை கடைசிவரை உங்கள் தங்கையாகவே பார்த்துக்கொள்ளுங்கள்.

காக்கா மறந்துவிடாதீர்கள்
எனக்கு முப்பது வயது என்றால் உங்களுக்கு முப்பத்தியொரு வயது. திருமணம் என்பது எனக்குமட்டுமல்ல உங்களுக்கும்தான்.

உங்கள் அன்புத்தங்கை
பா. பாத்திமா.


செய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top