Mohamed Farook Mohamed Farook Author
Title: இஃப்தார் நோன்பு திறப்பு கொடையையும், அன்பையும் பறை சாற்றுகிறது – ஜெயலலிதா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
...

எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனித நேயம் இருக்கும், எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும் என்று அதிமுக சார்பில் நடைபெற்ற நோன்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
 
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தினமும் மாலை நோன்பு திறப்பை கடமையாக கொண்டுள்ளனர். இந்த நோன்பு திறப்பை நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதில் கலந்து கொண்டு இப்தார் விருந்து வழங்குகிறார்கள்.

அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை காஜி சலாவுதீன் முகமதி அயூப் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி. வரவேற்றார். 

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் ஜெயலலிதா ஆற்றிய பேருரை:-இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகள் ஆகும். இவற்றில், இறை நம்பிக்கை, தொழுகை, தர்மம், ஹஜ் போன்றவை வெளிப்படையாகத் தெரியக் கூடியவை. ஆனால், ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை மற்றவரால் வெளிப்படையாக அடையாளம் காண முடியாது. யார் நோன்பாளி என்பதை எல்லாம் வல்ல இறைவன் நன்கு அறிவார்.

“நோன்பு நோற்பவர்களுக்கு நானே நேரடியாக கூலியைக் கொடுப்பேன்” என்று எல்லாம் வல்ல இறைவன் உறுதி அளிக்கிறார். இறைவனே நேரடியாக பலன் தரும் இந்த நோன்புக் கடமை மிக வலிமையும், புனிதமும் கொண்டது. “இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது, நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது. 

அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” என திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும், புறமும் தூய்மை அடைகிறது. தூய்மை அடைவதன் மூலம் இறைப் பற்றும், அன்பும் மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதன் மூலம் இறைவன் அருளை நாம் பெற முடிகிறது. 

இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் காக்கப்படுவர். இறைப் பற்று உள்ளவர்களை எந்த துன்பமும் அணுக இயலாது.
இஃப்தார் நோன்பு திறப்பு கொடையையும், அன்பையும் பறை சாற்றுகிறது. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனித நேயம் இருக்கும். எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும். அறம் தழைக்கும். 

ஏழ்மை விலகும். நன்மை பெருகும். இறை நம்பிக்கையுடைய, இஸ்லாமியப் பெருமக்களாகிய நீங்கள், இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைபிடித்து இறைவனின் விருப்பத்திற்கேற்ப மனித நேயத்திற்கும், அன்பிற்கும், எடுத்துக்காட்டாக நிச்சயம் விளங்குவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. சார்பில் 20-வது ஆண்டாக நடைபெறும் இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், இந்த மதுரை ஆதினம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி மாநிலத்தலைவர் ஒய்.ஜவஹர் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் நன்றி கூறினார். இப்தார் விருந்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது சொந்த செலவில் செய்து இருந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி இதே இடத்தில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top