Mohamed Farook Mohamed Farook Author
Title: மனசு ஏ.சி..!! வாழ்க்கை ஈஸி...!!!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மனதை அழகுபடுத்துவதும், அழுக்குப்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது உடம்பை கூலாக வைத்திருப்பது ஆரோக்கி யத்தின் ஆணிவேர் என்றால், மனதை கு...
மனதை அழகுபடுத்துவதும், அழுக்குப்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது
உடம்பை கூலாக வைத்திருப்பது ஆரோக்கி யத்தின் ஆணிவேர் என்றால், மனதை குளுகுளு வென வைத்திருப்பது வாழ்க்கைக்கான ஆதாரம்!
ஆனால், இன்றைய பரபர வாழ்க்கையில் கிண்டர் கார்டன் படிக்கும் வாண்டுகள்கூட, ''அம்மா, என்னை டென்ஷன் பண்ணாதே...'' என்கிறார்கள் சர்வசாதாரணமாக!

''பயங்கர ஸ்ட்ரெஸ்ஸா இருக்குப்பா...'' என்கிறார்கள் கேம்பஸ் பெண்கள்.
''எனக்கு வர்ற கோபத்துக்கு...'' என்று தினமும் ஒருமுறையாவது கொதித்துவிடுகிறார்கள் இல்லத்தரசிகள்.

அலுவலகத்தில் பவனி வருபவர்களிடமும் இந்த டென்ஷனும், மன அழுத்தமும் கட்டாய அமலாக்கத்தில் இருக்கின்றன.
- இப்படி, ''எங்கெங்கு காணிணும் ஸ்ட்ரெஸ்ஸடா...' என்றாகிவிட்ட இந்த நவயுக மன அழுத்தங்கள் இல்லாமல், வாழ்க்கையை இனிமையாகவும், 'ஜில்' என்றும் வைத்திருக்க வழி சொல்ல முடியுமா...?'' என்றோம் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பத்மாவதியிடம்.

''அதற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம்'' என்றபடியே பேச்சில் ஜிலுஜிலுப்பை ஏற்றிக் கொண்டவர், தொடர்ந்தார்...
''மனதை கூலாக வைத்திருப்பது வாழ்நாளை அதிகரிக்கும்; வாழும் நாட்களை அழகாகவும் அமைதியாகவும் வைத்திருக்க உதவும். மனதை ஜெயித்தவர்கள், வாழ்க்கையை ஜெயித்தவர்கள் என்று சொல்லலாம். அந்த மனதை ஜெயிக்க, அதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடல் இயக்கமும் செயல் இயக்கமும் பிரச்னையில்லாமல் சீராகப் போகும். சமநிலை கொஞ்சம் தவறினாலும்... கோபம் வந்து, வார்த்தைகள் வெடித்து, தடித்து, மொத்த சூழ்நிலையும் சூடாகிவிடும்.

மன அழுத்தம் (Stress), மனப்பதற்றம் (Frustration), மனச்சோர்வு (Depression) என மனதை இன்னும் சிக்கலாக்கி, சந்தோஷத்துக்கு வேட்டு வைப்பதே அதீத கோபம்தான். அப்படி ஒரு நிலைமை உருவாகும்போது, பாதிக்கப்படுபவர்கள் நாம் மட்டுமல்ல... நம்மைச் சுற்றியுள்ள குடும்பத்தாரும் தான். அது பணிபுரியும் இடம் எனில், அந்த இடத்தையும் பாதிப்பதோடு, நம் முன்னேற்றத்தையும் அது பாதிக்கும்'' என்று விளக்கிய டாக்டர்,
''பொதுவாக இன்றைய பரபரப்பு வாழ்க்கை முறையில் கோபம் வருவதற்கான காரணம்... அளவுக்கு மீறிய வேலைச் சுமை. அலுவலகம், வீடு, பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் இதுதான் கோபத்தைத் தூண்டும் முதல் காரணியாக இருக்கிறது. இரண்டாவது காரணம், 'நான் செய்கிற இந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை, இருந்தாலும் இதை நான் செஞ்சு தொலைக்க வேண்டியிருக்கு' என்ற சலிப்பும் விரக்தியும் கலந்த மனநிலை, கோபத்தைத் தூண்டி வளர்க்கும் விஷயமாக இருக்கிறது.

இந்த மனநிலை ஒரு குடும்பத் தலைவிக்கு ஏற்பட்டால்... இதை அவர் தன்னைவிட அதிகம் பவர் வாய்ந்த தன் கணவரிடமோ, அவரின் உறவுகளிடமோ வெளிப்படுத்த முடியாது. ஆனால், 'நமக்கு சிக்கின ஒரே அடிமை, பிள்ளைகள்தான்' என்று நினைத்து குழந்தைகளிடம் கொட்டுவார்கள். அது வேறு வகையான பிரச்னையை விதைக்கும். அவர்களிடமும் காட்ட முடியவில்லை என்றால்... அஞ்சு ரூபாய் அதிகமாகக் கேட்கும் ஆட்டோக்காரர், காய்கறிக்காரர் என வெளி மனிதர்களிடம் அதனைக் கொட்டி, 'ஐயோ அந்தம்மாவா... சரியான ராட்சஸி' என்ற பட்டத்தை இனாமாக வாங்கி வந்துவிடுவார்.

அலுவலகத்தில் பணி செய்பவர்கள் என்றால், 'என்னுடைய உழைப்பை, அறிவை, திறமையை இந்த நிர்வாகம் சரியாக அங்கீகரிக்கவில்லை', 'இன்கிரி மென்ட் கொடுக்கவில்லை', 'என் சப்-ஆர்டினேட் என்னுடன் கோ-ஆபரேட் பண்ண மாட்டேன் என்கிறார்' என்ற பல பிரச்னைகளால் மனதுக்குள் ஒருவித கோபம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

டீன் ஏஜினருக்கு, 'சும்மா படி, படினு இந்த அப்பா டார்ச்சர் பண்றார், பைக் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டா மனுஷன் வாங்கித் தர மாட்டேங்கறார்' என்று அந்த வயதுக்குரிய பிரச்னைகளால் கோபம் கொள்கிறார்கள்.
வயதானவர்களுக்கு, 'இத்தன வருஷம் இந்தக் குடும்பத்துக்கு தூணா இருந்தேன். ஆனா, இப்ப என்னால வருமானம் இல்லேனு ஆனவுடனே தூக்கிப் போட்டுட் டாங்க' என்ற மனநிலை மனதுக்குள் ஒரு ஆற்றாமையுடனான கோபத்தை உருவாக் கும்'' என்று கோபத்துக்கான சூழ்நிலைகளை விளக்கிய டாக்டர்,

''இவை எல்லாம் மனதுக்குள் கோபத்தை உண்டாக்க, அது மன உளைச்சலை உருவாக்கும். எல்லாம் மனதுக்குள் நீண்ட காலமாக குட்டை போல் தங்கி இருந்தால்... அது மன அழுத்தமாக மாறும். இது மட்டுமல்லாமல் சரியான சத்து இல்லாத சாப்பாடு, அனீமியாவை உருவாக்கி அதுவும் கோபம் உண்டாவதற்கு காரணமாக இருக்கும்!'' என்று புரிய வைத்த டாக்டர், இத்தகைய இக்கட்டிலிருந்து வெளி வருவதற்கான வழிகளையும் காட்டத் தவறவில்லை.

''தினசரி வாழ்க்கையில் சில விஷயங்களை சரியாகக் கடைபிடித்தாலே இந்த பிரச்னைகளிலிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பித்துவிடலாம். அதிக வேலைப் பளுதான் பிரச்னைக்குக் காரணம் என்றால்... தினசரி குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது பாட்டு கேட்பது, பிடித்த புத்தகம் படிப்பது போன்ற மனதுக்குப் பிடித்த பொழுது போக்கு விஷயங்களை ரிலாக்ஸேஷனுக்காக செய்வது நல்லது. நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் கிடைப்பது மாதிரி பார்த்துக் கொண்டாலே பாதி பிரச்னை எழாது.

ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர்கள் தினசரி பிரார்த்தனை செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உடற் பயிற்சி, நடைபயிற்சி போன்றவை உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றும்: மனதையும் கூட!
நினைத்தது நடக்கவில்லை என்றால்தான் மன அழுத்தம் அதிகமாகிறது என்றால், எந்த விஷயம் நடக்குமோ அதற்கான எதிர்பார்ப்பை மட்டும் மனதுக்குள் வளர்த்துக் கொள்வது நல்லதுதானே!'' என்று அழகாக எடுத்து உணர்த்தியவர்,

''ஒருவேளை இதையும் மீறி பிரச்னை வந்து விட்டால், வெளியே வர எளிய வழி 'எனக்கு இந்தப் பிரச்னை வந்திருக்கிறது' என்று ஏற்றுக் கொள்வது. அடுத்ததாக, 'நான் கோபப்படுகிறேன்' என்பதை ஒப்புக் கொண்டு, ஏன் என்பதற்கான காரணங்களை எல்லாம் ஆராய்ந்தறிந்து, பிரச்னைகளைத் தீர்க்க வழி கண்டுபிடிப்பதுதான் சரியான தீர்வு.

'நமக்கு மன அழுத்தம் இருக்கிறது' என்பதை உணர்ந்து கொண்டால், பிரச்னையை ஒரு நல்ல தோழமையிடம் பகிர்ந்துகொள்வது மனச் சுமையைக் குறைத்து, பிரச்னையை எதிர்கொள் வதற்கான வழிகளையும் சொல்லும். 

அதையும் மீறி பிரச்னை அதிகமானால், மனநல மருத்துவரை நாடுவதுதான் புத்திசாலித்தனம்!'' என்று மனதை கூலாக்கும் வழிகளை வரிசையாகச் சொன்னார் பத்மாவதி. உண்மைதானே... மனதை அழகுபடுத்துவதும், அழுக்குப்படுத்துவதும் நம் கையில்தானே!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top