Mohamed Farook Mohamed Farook Author
Title: அமைச்சர் நிலோஃபர் கஃபீல் செய்வாரா??
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழகத்தின் முதல் முஸ்லிம் பெண் அமைச்சர்…! இரண்டு முறை வாணியம்பாடி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்..! தாத்தா, தந்தை, சகோதர...
தமிழகத்தின் முதல் முஸ்லிம் பெண் அமைச்சர்…!
இரண்டு முறை வாணியம்பாடி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்..!
தாத்தா, தந்தை, சகோதரி, கணவன், மகன், மகள், மருமகள் என இவருடைய குடும்பத்தினரில் பெரும்பாலோர் மருத்துவர்களாய் முத்திரை பதித்தவர்கள்தாம். இவரும் மருத்துவர்தான்.
இவருடைய தாத்தா டாக்டர் அப்துல்லாஹ்தான் வாணியம்பாடி நகரத்தின் முதல் அறுவை சிகிச்சை வல்லுநர் என்று பெயர் பெற்றவர். உர்தூ மொழியில் தேர்ந்த கவிஞராகவும் இருந்தார். இவருடைய தந்தை அப்துல் அஜீம் அவர்களும் கைராசியான மருத்துவராக மக்களின் மனங்களில் இடம் பெற்றவர். இவருடைய கணவர் டாக்டர் கஃபீலும் மருத்துவர்தான். டாக்டர் கஃபீலின் அண்ணன் சையத் அஹ்மத் கபீர் சென்னையில் மருத்துவராக இருக்கின்றார். இவருடைய மகன் டாக்டர் சையத் இத்ரீஸும் வாணியம்பாடியில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தி வருகின்றார்.
அது மட்டுமல்ல, ஓய்வில்லாத அரசியல் செயல்பாடுகளுக்கு மத்தியிலும் தொழுகையைத் தவறவிடாதவர்; நோன்புகளைக் கைவிடாதவர் போன்ற சிறப்புகளும் இவருக்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவாழ்விலும் பர்தாவைப் பேணி நடக்கின்ற சிறப்புக்குரியவரும் இவர்.
என்றாலும்…
என்றாலும்…
இத்தனை சிறப்புகளைக் கொண்ட டாக்டர் நிலோஃபர் அவர்களின் வெற்றியை மனப்பூர்வமாகக் கொண்டாட முடியாத நிலையில் தவிப்பவர்கள்தாம் ஏராளம்.
அதற்குக் காரணம், சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வரம்மாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போது இவர் செய்த ஆர்ப்பாட்டமும் விலங்காண்டித்தனமும்தாம். குறிப்பாக ஏழை மூதாட்டி ஒருவர் கை கூப்பி, கெஞ்சக் கெஞ்ச, கதறக் கதற அவரைச் சற்றும் பொருட்படுத்தாமல், அவர் பக்கம் ஏறெடுத்தும் பார்க்காமல் அவருடைய சாத்துக்குடி கூடையை எடுத்து இந்த நிலோஃபர் அம்மா கவிழ்க்கின்றாரே, அந்தக் காட்சி கல் மனத்தையும் கரையச் செய்கின்ற காட்சி அல்லவா? அதன் காணொளியைப் பார்த்துவிட்ட பிறகு எவரால்தான் சந்தோஷப்பட முடியும்?
இப்போது சட்டமன்ற உறுப்பினராய், அமைச்சராய் வளர்ந்தோங்கி நிற்கின்ற டாக்டர் நிலோஃபர் கஃபீலுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.
டாக்டர் நிலோஃபர் அவர்களே!
தயவுசெய்து அந்த ஏழை மூதாட்டியைத் தொடர்பு கொண்டு அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். அவருக்கு இழப்பீடு கொடுங்கள். அவருடைய பேரனுக்கோ, பேத்திக்கோ அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.
ஏன் தெரியுமா?
நீங்கள் தொழா விட்டாலும், நோன்பைத் தவற விட்டாலும், பர்தாவைப் பேணுவதில் அலட்சியம் காட்டினாலும்கூட இறைவன் உங்களை மன்னித்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் அந்த ஏழை மூதாட்டியின் குமுறலுக்கும் கதறலுக்கும் நீங்கள் பதில் அளிக்கவில்லையெனில், அவள் உங்களை மன்னிக்காத வரையில் இறைவனும் உங்களை மன்னிக்க மாட்டான் என்பது உறுதி.
அவளிடம் மன்னிப்புக் கேட்பதோடு நின்றுவிடாமல் இனி வருங்காலத்தில் அது போன்ற அக்கிரமங்களில் ஈடுபடவே மாட்டேன் என்று பிரகடனம் செய்துவிடுங்கள்.
பொது வாழ்வில் உங்களின் செயல்பாடுகளும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளும் உங்களின் ஆற்றல்களை உணர்த்துகின்றன. இறைவன் உங்களுக்குத் தந்துள்ள இந்த ஆற்றல்களை ‘பணம், பதவி, பட்டம்’ ஆகியவற்றை மட்டுமே மையங்களாய்க் கொண்டிருக்கின்ற அரசியலில் வீணாக்குவதை நிறுத்திவிடுங்கள். அதற்குப் பதிலாக ‘மக்கள் நலன், நாட்டு வளர்ச்சி, வெளிப்படையான நிர்வாகம், ஊழல் அற்ற அரசாட்சி’ போன்ற விழுமம் சார்ந்த அரசியலில் அவற்றைச் செலவிடுவது குறித்து யோசியுங்களேன்….!
அவ்வளவுதான்.
– டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top