Mohamed Farook Mohamed Farook Author
Title: மனைவிக்காக 40 நாட்களில் தனியாளாக கிணறு வெட்டிய கூலித் தொழிலாளி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அவமானப்படுத்தப்பட்ட மனைவிக்காக 40 நாட்களில் தனியாளாக கிணறு வெட்டிய கூலித் தொழிலாளி மகாராஷ்டிர மாநிலம் வாசிம் மாவட்டம் கலம்பேஷ்வர் கிரா...
அவமானப்படுத்தப்பட்ட மனைவிக்காக 40 நாட்களில் தனியாளாக கிணறு வெட்டிய கூலித் தொழிலாளி

மகாராஷ்டிர மாநிலம் வாசிம் மாவட்டம் கலம்பேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபுராவ் தாஜ்னி. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவரது குடும்பத்தினரும் மற்றவர்களும், கிணறு வைத்திருக்கும் உயர்ஜாதி இனத்தவர்களிடம் சென்று, அவர்களின் அனுமதி பெற்று நீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

பாபுராவ் வழக்கம்போல நீர் எடுக்க தன் மனைவியுடன் சென்றுள்ளார். அந்தக் கிணற்றின் உரிமையாளர் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்.
அதன்பிறகு, வெகுண்டெழுந்த பாபுராவ், அயராது தனியே நின்று கிணறு வெட்டத் தொடங்கி, நாற்பதே நாட்களில் கிணறு வெட்டி, அதில் தண்ணீரும் கிடைத்துவிட்டது.. வழக்கமாக நான்கைந்து பேர் சேர்ந்து செய்கின்ற வேலையை, தனியொருவனாக சாதித்திருக்கிறார். அவமானமும் வைராக்கியமும் அந்த உந்துதலை அளித்திருக்கின்றன.

கிணறு வெட்ட அவரது குடும்பத்தினர் உட்பட யாரும் உதவவில்லை. கிணறு தோண்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்ய, புவியியல் கருவிகள், நீரோட்டம் கண்டறியும் கருவிகளின் உதவியையெல்லாம் அவர் பயன்படுத்தவில்லை. பாபுராவ் கிணறு தோண்ட தேர்ந்தெடுத்த இடத்தின் அருகே மூன்று கிணறுகளும், ஒரு ஆழ்துளைக் கிணறும் வறண்டு கிடந்தன.
பாபுராவுக்கு பைத்தியம்தான் பிடித்து விட்டது என அக்கிராமத்தினர் கேலி செய்தனர்.

ஆனால், உள்மனம் சொன்ன இடத்தில் தோண்ட ஆரம்பித்தவருக்கு இயற்கை வாய்ப்பு கொடுத்துள்ளது. அவர் தோண்டிய கிணற்றில் நீருற்று வந்து, அப்பகுதி தலித் மக்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.
“அந்தக் கிணற்றின் உரிமையாளர் பெயரைச் சொல்லி, இக்கிராமத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த விரும்பில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் என்பதால்தானே எங்களை அவமானப்படுத்தினார். இனி யாரிடமும் தண்ணீருக்காக பிச்சை யெடுக்கப்போவதில்லை என உறுதியெடுத்தேன். பக்கத்திலுள்ள மாலேகான் நகருக்குச் சென்று, கிணறு வெட்டுவதற்கான கடப்பாறை, மண்வெட்டி வாங்கி வந்து, வேலையை தொடங்கினேன். என் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது” என்றார் பாபுராவ்.

தினக்கூலியான பாபுராவ், தினமும் வேலைக்குச் செல்வதற்கு முன் நான்கு மணி நேரம் வந்த பின் இரண்டு மணி நேரம் கிணறு தோண்டியுள்ளார். ஆக, 40-வது நாளில் கிணற்றில் தண்ணீரைப் பார்க்கும் வரை தினமும் 14 மணி நேரம் இடைவிடாத உழைப்பு.

“அந்த 40 நாட்களில் என் உணர்ச்சிகள் எப்படிப்பட்டவை எனக் கூறவே முடியாது. எங்கள் பகுதி தலித் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். வேறு இன மக்களிடமிருந்து தண்ணீரை யாசிக்கக்கூடாது எனக் கருதினேன்” எனக் கூறும் பாபுராவ் தாஜ்னி, பி.ஏ. இறுதியாண்டு வரை படித்திருக்கிறார்.

அவரது மனைவி சங்கீதா கூறும்போது, “கிணற்றில் தண்ணீர் ஊறும்வரை அவருக்கு நான் உதவவேயில்லை. இப்போது ஒட்டுமொத்தக் குடும்பமும் கிணற்றை ஆழப்படுத்த உதவுகிறோம்” என்றார்.
இப்போது, 15 அடி ஆழம், 6 அடி அகலமும் உள்ள கிணற்றை, மேலும் 5 அடி ஆழம் தோண்டவும், 8 அடியாக அகலப்படுத்தவும் விரும்புகிறார் பாபுராவ் தாஜ்னி.

அப்பகுதியைச் சேர்ந்த ஜெய்சிறீ கூறும்போது, “பாபுராவுக்கு நன்றி. கிராமத்தின் அடுத்தகோடிக்கு சுமார் ஒரு கி.மீ. சென்றுதான் நீர் எடுத்து வர வேண்டும். யாரிடமும் அவமானப்படாமல் இப்போது எங்களுக்கு எந்த நேரமும் தண்ணீர் கிடைக்கிறது” என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top