Mohamed Farook Mohamed Farook Author
Title: இதுதான் வைகோவின் உண்மை முகமா…? பேரதிர்ச்சியளிக்கும் பேச்சு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நு ணலும் தன் வாயால் கெடும். இது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ… வைகோவுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை...
நுணலும் தன் வாயால் கெடும். இது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ… வைகோவுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுகிறார், காவிரி உரிமையை நிலைநிறுத்தப் போராடுகிறார், முல்லை பெரியாருக்காக கேரள எல்லைக்கே சென்று முற்றுகையிடுகிறார், மதுக் கடைகளுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்று அவருடைய அனைத்து பாஸிடிவ் பக்கங்களையும், தன் உணர்ச்சிவசப்பட்ட பேச்சால் அவரே குலைத்துக் கொள்கிறார்.  அண்மை பேச்சு, கருணாநிதியை அவர் குலத்தொழிலை செய்ய பரிந்துரைத்தது. மன்னிக்கவும் வைகோ. இதை உங்கள் உணர்ச்சிவசப்பட்ட மற்றொரு பேச்சு என்று சுருக்கி கொள்ள முடியாது… இது பண்ணையார் மனோபாவம். தான் மட்டுமே சிறந்தவன், மேலானவன் என்று நினைக்கும் பண்ணையார் மனோபாவம்  அன்றி வேறில்லை.

நீங்கள் எந்த வகை வைகோ…?

ஒடுக்கப்பட்டவர்களை மனதளவில் காயப்படுத்துபவர்கள் இரண்டு வகை. ஒன்று அவர்களை முகத்திற்கு நேராக கிண்டல் செய்வது. இரண்டாவது, தாம் பரந்த மனப்பான்மை உடையவன்  என்பதை காட்டிக் கொள்வதற்காக மட்டுமே அவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வது. முதல் வகையை சுலபமாக இனம் காண முடியும். இரண்டாவது வகைதான் கடினம். இதில் நீங்கள் எந்த வகை வைகோ…?
வரலாற்று தொடர்ச்சியில் மனித மனங்களில் சீல் படிந்துள்ள சாதிய உணர்வு, உங்களுக்குள்ளும் புதைந்து கிடக்கிறதா? அரசியலைத் தாண்டி உங்கள் மீது அபிமானம் வைத்தவர்கள் அனைவரும், ஒரு கணம் உங்களின் அந்த பேச்சை கேட்டதும், அதிர்ந்துதான் போயிருப்பார்கள். நீங்கள் மாற்றுத் தலைவர் அல்ல… மற்றுமொரு தலைவர் என்பதை உங்களின் உரையின் மூலமே கண்டு கொண்டுவிட்டார்கள்!

வைகோ பேசியது சரியா திருமா…?

உங்களிடம்தான் கேட்க வேண்டும் திருமா…? இடதுசாரிகள் மீது இந்த விஷயத்தில் நம்பிக்கை சரியவில்லை என்றாலும், உங்களிடம்தான் முதலில் கேட்க வேண்டும் திருமா…? இத்தனை இக்கட்டுகள், இடர்பாடுகள் மத்தியிலும், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் உங்களிடம் பேச வேண்டும் திருமா…? கட்சி பேதங்கள் தாண்டி அனைத்து சமூக பிரச்னைகளிலும் தீர்க்கமான கருத்தைச் சொல்லும் உங்களிடம் கேட்க வேண்டும் திருமா…!
ஊடகவியலாளர் சந்திப்பில், வைகோ பேசியது சரியா…? காட்சி ஊடகத்தில் பார்த்த எங்களை விட பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவருக்கு அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்த உங்களுக்கு அவர் பேசியது நன்கு கேட்டிருக்கும். கேட்கவில்லை என்றால், அவரது மொழிகளில் அப்படியே சொல்கிறேன், “அவர் நாதஸ்வரம் வாசிக்கிற தொழிலுன்னு தெரியும்… அதனால சொன்னேன்…” என்கிறார். மறைமுகமாக அவரது சாதியைக் குறிப்பிடுகிறார்.  “நீங்களே ஒன்றை நினைத்து கற்பிதம் செய்து கொள்ளாதீர்கள்…” என்று சொல்லாதீர்கள் திருமா. எங்கள் எல்லாரையும் விட, ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கான அரசியல் விடுதலையை  முன்னெடுக்கும் உங்களுக்கு, அந்த சொற்களின் வலி நன்கு தெரியும். எந்த அரசியல் காரணங்களுக்காகவும் மூடி மறைத்து, சொற்கள் விளையாட்டில் ஈடுபடாமல், நேரடியாக சொல்லுங்கள் வைகோ பேசியது சரியா…?
வைகோ பேசியது சரியா இடதுசாரிகளே…?
கீழ்வெண்மணி, வாச்சாத்தி, நத்தம் காலனி, உடுமலைப்பேட்டை என எங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு அநீதிகள் நடந்தாலும், முன்வரிசையில் நின்று போராடுபவர்கள் நீங்கள். நீங்கள் சொல்லுங்கள் வைகோ பேசியது சரியா…? ‘இல்லை… அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார்’ என்று சொல்லாதீர்கள். விஜயகாந்திற்கும், வைகோவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கிறது. அனைத்து இசங்களும், அரசியலும் அறிந்தவர் வைகோ.  கிரேக்க குடிகளுக்கான வரலாற்று அநீதிகளை, மேடைகளில் இப்போதும் கண்டிப்பவர் வைகோ. அதனால், இதை உணர்ச்சிவசப்பட்ட பேச்சு என்று சுருக்கிக் கொள்ள முடியாது. சரி.  எங்களுக்கு தேர்தல் வெற்றியை விட, கொள்கைகள்தான் முக்கியம் என்று நீங்கள் சொல்வது உண்மையென்றால், சாக்கு போக்குகளை தேடாமல் நேரடியாக சொல்லுங்கள்… வைகோ பேசியது சரியா…?

வைகோ பேசியது சரியா விஜயகாந்த்…?
உங்களைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். சாதி அரசியலை விரும்பாதவர் நீங்கள். உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையின் போது, சாதிய வாக்குகள் சிதைந்து விடுமோ என்று அனைவரும் பதற்றப்பட்ட போது, உங்களிடமிருந்துதான் அழுத்தமான கண்டன அறிக்கை வந்தது… நீங்களே சொல்லுங்கள் இன்று வைகோ பேசியது சரியா…?
மக்கள் நலக் கூட்டணியினரே… தேர்தல் வெற்றியும், அதற்கான கூட்டணியும்தான் முக்கியமென்று, நீங்கள் கருதிவிட்டீர்களா…? கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துவிட்டீர்களா…? நீங்களும் மற்றுமொரு அரசியல் அணியைப் போல்தான் நடந்து கொள்வீர்கள் என்றால், நீங்கள் எதற்கு…? இருக்கிற பிணிகளே போதுமே!
தேர்தல் வெற்றியை அறுவடை செய்வதை விட, மக்களின் நம்பிக்கையைதான் நீங்கள் அறுவடை செய்ய வேண்டும். மக்களுக்கு அரசியல் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியை நீங்களும் அதிகமாக்கிவிடாதீர்கள்!

– மு. நியாஸ் அகமது நன்றி  - விகடன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top