vkrnajur vkrnajur Author
Title: தமிழ்நாட்டில் இலவச மருத்துவம்: பா.ம.க. தேர்தல் அறிக்கை !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:– மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்பட...
அந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.

மாணவர்கள் எளிதாக பள்ளிக்குச் சென்றுவர மாணவர் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும்.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

மாணவர்களுக்கான பேனா முதல் இலவச பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள் மற்றும் ஐ–பேட் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இலவச இணைய இணைப்பு தரப்படும்.

மருத்துவக் கல்லூரி இல்லாத 15 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள். விழுப்புரத்தில் சித்த மருத்துவக் கல்லூரி.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். இதனால் மருத்துவத்திற்காக மக்கள் ஒருபைசா கூட செலவழிக்க தேவையிருக்காது.

கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால உதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் வரை, அவர்களின் தாய்க்கு தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும்.

வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். உழவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் இதில் சேர்க்கப்படும்.

தோட்டக்கலைத்துறை, நீர்ப்பாசனத் துறை ஆகியவற்றுக்கு தனித்தனி அமைச்சகங்கள் உருவாக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களையும் சேர்த்து வேளாண் துறைக்கு மொத்தம் 3 அமைச்சர்கள் இருப்பார்கள்.

வேளாண்மைக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதைகள் உள்ளிட்டவையும், மின்சார மோட்டாரும் இலவசமாக வழங்கப்படும்.

உழவர்களின் பயன்பாட்டுக்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஓர் டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்.

நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம்… தனி அமைச்சர்

ஆறுகள் மற்றும் கால்வாய்களில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டப்படும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பா.ம.க. ஆட்சி அமைந்தபின் முதலமைச்சர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் ஆணையில் தான்.

தமிழ்நாட்டில் உள்ள மது ஆலைகளின் உரிமம் இரத்து செய்யப்பட்டு மூடப்படும்.

மதுவால் கணவனை இழந்தப் பெண்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.

கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.

கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர் கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படும்.

ஊழலை ஒழிப்பதற்காக, புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே லோக் அயுக்தா சட்டம் கொண்டுவரப்படும்.

தகவல் ஆணையம் 10 உறுப்பினர்கள் மற்றும் தலைவரைக் கொண்ட வெளிப்படையான அமைப்பாக மாற்றப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.

ஊழல் குறித்து புகார் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி சேவை வழங்கப்படும்.

முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில், தமிழகம் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக தலைமைச் செயலாளர் நிலையிலான அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அம்மண்டலத்தில் நிர்வாகம் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படும்.

திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்.

தமிழ்நாட்டில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் சட்டமேலவை மீண்டும் ஏற்படுத்தப்படும்.

ஆண்டுக்கு நான்குமுறை சட்டப்பேரவை கூடுவதும், 100 நாட்கள் பேரவைக் கூட்டம் நடப்பதும் உறுதி செய்யப்படும். பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

வேளாண் துறைக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சரவைக் குழு அமைக்கப்படும்.

உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வேலை உறுதி செய்யப்படும்.

5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, தனிப்பிரிவு தொடங்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக, இரவு நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தமிழ்நாட்டில் ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நிலங்களின் மீதான வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும்.

அனைவருக்கும் கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மிச்சமாகும். இதை அக்குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவசமாக கருதலாம்.

தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.08 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும்.

அனைத்து மாவட்ட சாலைகளும் இருவழிப் பாதைகளாக்கப்படும்; அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும் நான்குவழி பாதைகளாக மாற்றப்படும்.

குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்; வேலூருக்கு விமான சேவை தொடங்கப்படும்.

குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்குடன் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த இரு ஆண்டுகளில் கழிப்பறை, சூரிய ஒளி மின்சார வசதியுடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்படும்.

பேருந்துக்கட்டணங்கள் குறைக்கப்படும்.

ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக அனைத்து வசதிகளுடன் கூடிய அரசுப் போக்குவரத்துக்கழக பேரூந்துகள் இயக்கப்படும்.

லாபத்தில் இயங்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

சென்னையில் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்படும்.

மின்துறை சீர்திருத்தம் மூலம் 15 சதவீத மின்கட்டணம் குறைக்கப்படும்.

இருமாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவதற்கு பதில், மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும். இதனால், 25 சதவீதம் வரை கட்டணம் குறையும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும்.

படிப்பை முடித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும் மாதம் ரூ.3000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.

60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ. 2000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக அவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அரசிடம் உள்ள ஆவணங்களின்படி இவர்கள் அடையாளம் காணப்பட்டு உதவி வழங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் எவ்வளவு பால் கொண்டு வந்தாலும், அதை ஆவின் கொள்முதல் செய்யும்.

ஆவின் பால் கொள்முதல் தினமும் 50 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்படும்.

பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு 40 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும்.

காஞ்சிபுரம் – ஆரணி, கும்பகோணம்–திருபுவனம் ஆகிய இடங்களில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் நெசவாளர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்; இலங்கைப் படைகள் பறிமுதல் செய்து வைத்துள்ள படகுகள் மீட்கப்படும்.

மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி இரட்டிப்பாக்கப்படும்.

வரிச்சீர்திருத்தம் தொடர்பான வணிகர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

சிறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இலவசக் காப்பீட்டு வசதி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.

அகவிலைப்படியில் 50 சதவீத அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.

காவல்துறையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

சென்னை, தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கூடுதலாக 3 மகளிர் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

பெண்களுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

குடும்பத்தைப் பிரிந்து வாழும் திருநங்கையர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதியாக விடுதிகள் அமைத்துத்தரப்படும்.

பழங்கால கோயில்கள் அனைத்தும் சீரமைக்கப்படும்.

கோயில் குளங்கள் அனைத்தும் தூர்வாரி மேம்படுத்தப்படும்.

திருட்டு வி.சி.டி.க்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை.

திரைத்துறையில் இழந்த அனைத்து பெருமைகளையும், வாய்ப்புகளையும் மீட்டு, சென்னையை தென்னிந்திய திரை உலகின் தலைநகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

திரைத்துறையில் தனி நபர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்படும். அரசின் தலையீடு முற்றிலுமாக இருக்காது. திரைத்துறை ஒரு கலைத்துறை என்ற வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் கணினி மயமாக்கப்படும்.

அனைத்துப் பொருட்களையும் அனைத்து நாட்களிலும் வழங்க வகை செய்யப்படும்.

நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கும் திட்டமும், பருப்பு உள்ளிட்ட பிற தானியங்களை மானிய விலையில் வழங்கும் திட்டங்களும் தொடரும். அரிசி 20 கிலோ மூட்டையாகவும், பிற பொருட்கள் ஒரு கிலோ பாக்கெட்டுகளிலும் வழங்கப்படும்.

200 குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கப்படும்.

அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

அனைத்து கிரானைட் மற்றும் தாதுமணல் குவாரிகள் முறைப்படுத்தப்படும்.

கிரானைட், தாது மணல் மற்றும் ஆற்று மணல் கொள்ளை குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும், தமிழக மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்.

நகரங்களில் பேரூந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை–ஃபை வசதி செய்துத் தரப்படும்.

காவல்துறையினருக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

காவலர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்கப்படும்; ஓய்வு பெறும் போது ஆய்வாளர் நிலைக்கு உயர்வது உறுதி செய்யப்படும்.

பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

யூகலிப்டஸ் தைல மரங்களும், சீமைக் கருவேல மரங்களுக்கு இணையாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை வளர்க்கத் தடை விதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் பனை மரங்கள் அழிந்து வருவதைத் தடுத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி செயல்படுத்தும்.

நீரா பானம், பனை வெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும் விற்பனையும் ஊக்குவிக்கப்படும். பனம் பழத்திலிருந்து ஜாம் தயாரித்து விற்பனை செய்யப்படும்.

சென்னையில் மாநகரப் பேரூந்துகளின் எண்ணிக்கை 8000 ஆக உயர்த்தப்படும்.

சென்னையில் அனைத்து பேரூந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மூலிகைப் பகுதி சுற்றுலா, அருவிச் சுற்றுலா, கதை சொல்லி சுற்றுலா என பல கருத்துக்களின் அடிப்படையிலான சுற்றுலாக்கள் தொடங்கப்படும்.

ஆன்மிகச் சுற்றுலா தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடுகட்டுவதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அரசு மானிய விலையில் வழங்கும்.

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழகப் பெருவிழாவாகக் கொண்டாடப்படும்.

மாணவர்களின் மனம் கவர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பெயரில் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top