vkrnajur vkrnajur Author
Title: பரீட்சைக்குப் பட்டினியாகப் போகலாமா?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
நம் மகளுக்கோ, மகனுக்கோ பொதுத் தேர்வு என்றால், விடுப்பு எடுத்துப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அக்கறையை வெளிப்படுத்துகிறோம். இது நல்லதுத...
நம் மகளுக்கோ, மகனுக்கோ பொதுத் தேர்வு என்றால், விடுப்பு எடுத்துப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அக்கறையை வெளிப்படுத்துகிறோம். இது நல்லதுதான். 

ஆனால், தேர்வு நேரத்தில் நம் வாரிசு உட்கொள்ளும் உணவு, தூங்கும் நேரம், மற்ற வழக்கங்கள் முறையாகக் கடைப்பிடிக்கப்படாவிட்டால் நன்றாகப் படித்திருந்தாலும், சரியாகத் தேர்வு எழுதுவது கடினம். அந்த அம்சங்களில் போதிய கவனம் செலுத்துகிறோமா?

சிலருக்குத் தேர்வு எழுதும்போது கைவிரல்கள் இழுத்துக்கொள்ளுதல், கண் இருட்டுதல் போன்றவை ஏற்படும். இதற்குக் காரணம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், உடலில் சக்தி குறைவதுதான். இதனால் நம் வாரிசுகளின் முயற்சிக்கு முழு பலன் கிடைக்காமல் போய்விடும். இப்படி ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனச் சோர்வு இல்லாமல், படித்தது மறக்காமல், ஆரோக்கியமான திட மனதுடன் தேர்வு காலம் முடியும்வரை இருக்க என்ன செய்ய வேண்டும்?

காலை உணவுப் பிரச்சினை
தேர்வுக் கூடத்துக்கு வெறும் வயிற்றில் செல்வது பலரும் செய்யும் மிகப் பெரிய தவறு. இதை உணராமல் போனால் தேர்வு எழுதும்போது கவனமின்மை, மனச்சோர்வு, விரைவாக விடையளிக்க முடியாமல் ஏற்படும் மறதி போன்றவை உருவாகலாம்.

தீர்வு
காலை உணவு எடுத்துக்கொள்வது கட்டாயம். 'Break fast in the classroom' என்ற திட்டம் அமெரிக்க மாகாணங்கள், சிங்கப்பூர் போன்ற முன்னேறிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதற்கு நல்ல அத்தாட்சி. அதிலும் காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

காலை உணவில் வாழைப்பழம் எதற்கு? தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் தொடர்ந்து உட்கார்ந்து எழுதுவதால் ஏற்படும் கை கால் சோர்வுக்குக் காரணம் பொட்டாசியம் சத்து குறைவுதான். அதை ஈடுகட்டும் சிறந்த உணவு எதுவென்று கேட்டால், அது வாழைப்பழமே. 

விம்பிள்டன் போன்ற அதிக உடல் உழைப்பு தேவைப்படும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பவர்கள், இடைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். இப்படிச் சர்வதேச விளையாட்டு வீரர்களின் உணவாகத் திகழும் வாழைப்பழம், தமிழ்நாட்டில் உள்ள பொதிகைமலையைத் தாயகமாகக் கொண்டது. எல்லா வகை வாழைப் பழங்களும் சிறந்தவைதான். அதிலும் நாட்டுப் பழம் என்ற பேயன் வாழைப் பழம் தனிச் சிறப்புமிக்கது.

சமச்சீரான காலை உணவு
குறைந்த அளவு இனிப்புச் சுவை கொண்ட மாவுப்பொருட்கள் (low glycemic index) மற்றும் புரதப் பொருட்கள் சேர்ந்த உணவே சமச்சீரான காலை உணவு. அனைத்து சத்துகளும் சமஅளவு கொண்ட வெண் பொங்கல் மற்றும் கேழ்வரகுப் புட்டு, அவித்த சிறுபயறு (பச்சைப்பயறு) கலவை உடலுக்குத் தேவையான அதிக கலோரியைத் தொடர்ச்சியாக வழங்கும்.
இது எப்படிச் சமச்சீராக இருக்கிறது? மாவுப்பொருட்கள் விரைவாகச் செரிமானமாகும். அதைப் புரதத்துடன் கலந்து உட்கொள்வதால் tyrosine எனப்படும் நரம்புகளுக்குப் புத்துணர்வு ஊட்டும் வேதிப்பொருளின் அளவு உடலில் உயர்கிறது.

குளுகோஸ் தூள் அவசியமா?
அதிக இனிப்பு சுவை கொண்ட இனிப்புப் பொருளான குளுகோஸ் தூளைத் தேர்வுக்குச் செல்வதற்கு முன் குடித்தால், அதிகச் சக்தி கிடைக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். அது அதிக கலோரியை வழங்கும் என்பது உண்மைதான். அதேநேரம், சில மணி நேரத்தில் அதிக சோர்வையும் இலவச இணைப்பாக வழங்கி, தேர்வு எழுதும் நேரத்தை வீணடித்துவிடும் தன்மை அதற்கு உண்டு. அதைத் தவிர்ப்பது நல்லது. அதிக இனிப்பு கொண்ட தேநீர், காபி, ஊட்டச்சத்து பானங்கள், சாக்லெட் போன்றவற்றையும் தேர்வு காலத்தில் தவிர்ப்பது நல்லது.

மன அழுத்தம் நீக்கும் எள்
சங்கப் பாடல்களில் போரில் வெற்றி பெற்ற போர் வீரர்கள் நாடு திரும்பும்போது, தம்முடன் எடுத்துச் சென்ற எள், கொள்ளு ஆகிய விதைகளை எதிரி நாட்டில் விதைத்துவிட்டுத் திரும்பிய நிகழ்வு பதிவாகியுள்ளது. இதேபோல முதல் உலகப் போருக்குச் சென்ற வீரர்கள் எள்ளை உடன் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையை எள் கொண்டிருப்பதே இதற்கு முதன்மைக் காரணம். நிறைவு பெறாத ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள எள்ளுருண்டை தேர்வு நேரக் காலை உணவாக இருந்தால், அப்போது ஏற்படும் மன அழுத்தத்தைத் திறம்படச் சமாளிக்கலாம். அறிவியலும் இதை ஆமோதிக்கிறது.

பகலுறக்கம் நல்லதா?
தேர்வு நேரத்தில் தங்கள் வாரிசுகள் பகலில் நன்றாகத் தூங்கிவிட்டு, இரவில் விழித்துப் படிப்பதாகப் பல பெற்றோர்கள் பெருமை பொங்கப் பேசுவார்கள். ஆனால், இது தவறு என்பதை உணர்த்துகிறார் தேரையர் என்னும் சித்தர்: 'பகலுறக்கம் செய்யோம்' என்று அதை தீவிரமாக மறுக்கிறார். பல நோய்களின் தொடக்கம் பகலுறக்கம், அதற்கு Narcolepsy என்று நவீன அறிவியல் பெயரிட்டிருக்கிறது.

பகலில் தூங்கினால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து, உடலே நோய்களுக்கு விரும்பி அழைப்புவிடுக்கும். இரவில் திடீரென்று எழுந்து பாடங்களைப் பற்றி பேசும் cataplexy போன்ற தொல்லைகள், தூக்கத்தில் எழுந்து அடிக்கடி மணியைப் பார்த்தல் (disrupted nocturnal sleep), அதிகப் பயங்கரக் கனவு போன்றவை இதன் விளைவாகத் தோன்றலாம். 

இவற்றின் காரணமாகத் திடுக்கிட்டு எழுவதை hypnagogic and hypnopomic என்றும், தூக்கத்தில் யாரோ உடலை அமுக்கிப் பேச முடியாத நிலை ஏற்படும் sleep paralysis என்ற அடுக்கடுக்கான துன்பங்கள் ஏற்படலாம். எய்ட்ஸ் நோய்க்கான சின்னமான செஞ்சுருள் போல, சர்வதேசப் பகலுறக்க விழிப்புணர்வின் சின்னம் கருஞ்சுருள்.

தீர்வு
பகலுறக்கம் முற்றிலும் தவிர்த்து இரவில் 6-8 மணி நேரத் தூக்கம் அவசியம். தேர்வு நேரத்தில் இது அத்தியாவசியம். ஆரோக்கியமான உணவு முறை, இதர பழக்க வழக்கங்கள், தூங்கும் நேரம் போன்றவற்றை முறைப்படுத்தினாலேயே நாம் எதிர்பார்ப்பதைவிட தேர்வுகளை இயல் பாக எதிர்கொள்ளும் தன்மையும், அதிக மதிப்பெண்களும் நிச்சயம் கிடைக்கும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top