vkrnajur vkrnajur Author
Title: தலித் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு கொள்கையில் மாற்றமில்லை - பிரதமர் மோடி !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தலித் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள...
தலித் பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, இட ஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் பிரச்சாரம் செய்தனர்.

இதற்கிடையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அகில பாரத பிரதிநிதி சபையின் 3 நாள் கூட்டம் சமீபத்தில் நாக்பூரில் நடை பெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அதன் பொதுச் செயலர் சுரேஷ் பய்யாஜி செய்தியாளர்களிடம் பேசும் போது, “வசதி படைத்த பிரிவினரும் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகின்றனர். 

இதை ஏற்க முடியாது. சமூக நீதிக்காகத்தான் இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் கொண்டுவந்தார். தற்போது இடஒதுக்கீடு கோருபவர்கள் இதை மனதில் கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி யில், பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் தேசிய நினைவிடத் துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அம்பேத்கர் நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்போது அவர் கூறிய தாவது:

பாபா சாஹேப் அம்பேத்கரின் கனவை நனவாக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 1956-ல் அம்பேத்கர் நம்மை விட்டு மறைந்தார். 60 ஆண்டுகள் கழித்து இன்றுதான் அவருக்கு நினை விடம் அமைக்க அடிக்கல் நாட்டப் படுகிறது. 

இதற்காக 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒருவேளை இதை நான்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்பது விதியாக இருக்கலாம்.
இந்த கட்டிடம் டெல்லியின் அடையாள சின்னமாக விளங்கும். ஏன் உலகின் அடையாளமாகவும் விளங்கும். நம்மைப் பொருத்த வரை வரும் தலைமுறையினருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கும். 

இந்த நினைவிடத்தின் கட்டுமானப் பணியை வரும் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே ஆண்டில் ஏப்ரல் 14-ம் தேதி இதை திறந்து வைப்பேன்.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானபோது, தலித், பழங்குடி யினருக்கான இட ஒதுக்கீடு ரத்தாகிவிடும் என சிலர் வதந்தி பரப்பினர். அவர் 2 முறை பிரதமராக இருந்தார். ஆனால் இட ஒதுக்கீடு ரத்தாகவில்லை. மத்தியில் இப்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலை யில், இட ஒதுக்கீடு ரத்தாகிவிடும் என்ற பொய்யை சிலர் மீண்டும் பரப்பி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கெல்லாம் இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் உள்ளது.

எனவே, இட ஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்பதை உறுதியாக சொல்கிறேன். இட ஒதுக்கீடு என்பது தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின்தங்கிய நிலை யில் உள்ள மக்களின் உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது. நான் ஏற்கெனவே கூறியதுபோல, அம்பேத்கரே மீண்டும் தோன்றி னாலும் இட ஒதுக்கீட்டை பறிக்க முடியாது.

முன்னாள் பிரதமர் ஜவஹர் லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் திடீரென விலகினார். ஏன் தெரியுமா? பெண்களுக்கு சம உரிமை வழங்குவது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. அப்போது, பெண்களுக்கு சம உரிமை கிடைக்காவிட்டால் நான் அமைச்சர வையில் நீடிக்க மாட்டேன் என்று கூறி விலகினார். இந்த வரலாறு மறக்கப்பட்டது.

தலித் மக்களுக்காக மட்டும் அம்பேத்கர் குரல் கொடுத்தார் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து சமூகத்திலும் பின்தங்கி யவர்களின் நலனுக்காக பாடு பட்டார். கறுப்பினத்தவர்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போல சர்வதேச தலை வராக விளங்கினார் அம்பேத்கர்.

கடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை சிலரால் (காங்கிரஸ்) ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் எங்களை விரும்ப வில்லை. எங்களைப் பார்க்கக்கூட அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் எங்கள் மீது பொய் யான குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள்.
இவ்வாறு மோடி தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top