Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழகத்தில் தீவிர வாகன சோதனை - ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்ல முடியாது!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தீவிர வாகன சோதனை கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர...
தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தீவிர வாகன சோதனை
கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
வாகனங்களில் கணக்கில் வராத பணம் எடுத்துச்செல்வது, ஆயுதங்கள், மதுபாட்டில்கள் எடுத்துச்செல்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் களை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சோதனைச் சாவடிகள்
சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை முற்றிலும் தடுப்பதற்காக சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்கள் நடப்பது பற்றி தகவல் கிடைத்தால், இந்த பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபடுகின்றனர்.
 
அரசியல் கட்சியினர், வாக் காளர்களுக்கு இலவசங்கள் கொடுக்க முயற்சிப்பதை தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் தலா 3 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
 
திருவல்லிக்கேணி தொகுதி
எழும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேப்பேரி போலீஸ் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட 6 பகுதிகளில் நேற்று வாகன சோதனை நடந்தது. அதேபோல் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி, மயிலாப்பூர் சட்டசபை தொகுதி உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் இடத்தை மாற்றிக்கொண்டு சோதனையில் ஈடுபடுகின்றனர்.
 
இதுகுறித்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியதாவது:-
ஆவணங்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்துவதற்காக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையின் போது வீடியோ மூலம் நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் படியான எந்த பொருளும் இதுவரை சிக்கவில்லை. ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை யாராவது எடுத்துச் சென்றால், அவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும்.
 
பண இழப்பும், காலவிரயமும் ஏற்படுவதை தவிர்க்க தங்கம், வெள்ளி வியாபாரிகள் மற்றும் மொத்த கொள்முதல் வியாபாரிகள் தாங்கள் கொண்டு செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்களை கைகளில் கொண்டு செல்ல வேண்டும். தனியார் கார்கள் மட்டுமின்றி, ஆங்காங்கு ஆம்னி, அரசு பஸ்களையும் நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. பொதுமக்களும், வியாபாரிகளும் முறையான ஆவணத்தோடு பணம் எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
 
காரை நிறுத்தி சோதனை
நாமக்கல் முதலைப்பட்டி புறவழிச்சாலையில் கூட்டுறவு துணை பதிவாளர் திரவியம் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சேலத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.80 ஆயிரம் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
 
காரில் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புண்ணாக்கு வியாபாரம் செய்து வருவதும், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் வியாபாரத்தை முடித்து விட்டு, பணத்தை கொண்டு செல்வதும் தெரியவந்தது.
 
என்றாலும் அதற்கு உரிய ரசீது அவரிடம் இல்லை என்பதால் அந்த பணத்தை அதிகாரிகள் நாமக்கல் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால், பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
தடுத்து நிறுத்தினர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 11-வது வார்டு வெங்கடசாமி தெருவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி கோலப்போட்டி நடத்தி பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்க அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
அதன்பேரில் பறக்கும்படை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, கோலப்போட்டி நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருந்தது தெரியவந்தது. மேலும் ஜெயலலிதாவின் உருவம் உள்பட பல்வேறு கோலங்கள் போடப்பட்டு இருந்ததையும் கண்டறிந்தனர். இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகளிடம் பரிசு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என கூறி, பரிசு வழங்கும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.
 
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிறப்பு தாசில்தார் சிவக்குமாரி தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது கூக்கல்தொரை பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரசாந்த் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த கேரட்டை மேட்டுப்பாளையத்தில் விற்று விட்டு ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்தை கொண்டு செல்வது தெரியவந்தது. இருப்பினும் அதற்கு உரிய ரசீது அவரிடம் இல்லை என்பதால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
 
கேரள வியாபாரி
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு தாசில்தார் இன்னாசி முத்து தலைமையிலான பறக்கும் படையினர் கேரளாவில் இருந்து வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி கேரள மாநிலத்தை சேர்ந்த வியாபாரி பிஜூ என்பவர் ரூ.60 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி ஊட்டிக்கு கொண்டு சென்ற ரூ.1ரு லட்சம் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நடந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது.
 
ரூ.10வு லட்சம் பறிமுதல்
கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும்படை தாசில்தார் மகேசுவரி தலைமையில் நேற்று மாலை 6 மணிக்கு வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகத்தில் இருந்து கூடலூர் நோக்கி வந்த காரில் கேரள மாநிலம் கொச்சி ஆலுவா பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் இருந்தார். அவர் குண்டல்பேட் பகுதியில் இஞ்சி விவசாயம் செய்து வருவதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இன்றி அவர் கொண்டு சென்ற ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
நீலகிரி மாவட்டதில் நடந்த வாகன சோதனையில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.10 லட்சத்து 74 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top