vkrnajur vkrnajur Author
Title: தஞ்சை விவசாயி மீது தாக்குதல்: தலைமைக் காவலர்கள் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தஞ்சாவூர் அருகே டிராக்டர் கடன் நிலுவைக்காக விவசாயி பாலனை தாக்கி, இழுத்துச் சென்றது தொடர்பாக தலைமைக் காவலர்கள் உட்பட 3 போலீஸார் பணியிட மாற்...
தஞ்சாவூர் அருகே டிராக்டர் கடன் நிலுவைக்காக விவசாயி பாலனை தாக்கி, இழுத்துச் சென்றது தொடர்பாக தலைமைக் காவலர்கள் உட்பட 3 போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோ.பாலன் (40), கோட்டக் மகிந்திரா என்ற தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடன் வாங்கியுள்ளார்.
கடைசி 2 தவணை செலுத்து வதில் தாமதம் ஏற்பட்டதால், நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல் தலைமையில் சென்ற போலீஸார், பாலனை அடித்து, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டுள்ள நிலையில், மத்திய மண்டல காவல் துறை ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில், இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பாப்பாநாடு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் ராஜா, குமரவேல், முதல் நிலைக் காவலர் ஏசுராஜ் ஆகிய 3 பேரை தஞ்சாவூர் ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றி, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகணன் நேற்று உத்தரவிட்டார்.
மேலும், இதில் தொடர்புடைய ஆய்வாளர் குமரவேலுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சாகும்வரை உண்ணாவிரதம்…
விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை கைது செய்து, நீதி விசாரணை நடத்தக் கோரி வரும் 14-ம் தேதி முதல் ஒரத்தநாட்டில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்து விவசாயிகள் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் கோயம்புத்தூர் தெய்வசிகாமணி தலைமையில் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இக்கூட்டத்தில், விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்திய காவலர்களில் 3 பேரை மட்டும் பணியிட மாற்றம் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய போலீஸார், தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்தத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயி பாலனுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரிடமிருந்து ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை நிபந்தனை இல்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
வரும் 13-ம் தேதிக்குள் இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 14-ம் தேதி முதல் ஒரத்தநாட்டில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் தீர்மானித்து அறிவிக்கப்பட்டது.
நடிகர் கருணாகரன் உதவி
பாலன் தாக்கப்படும் வீடியோ பதிவைப் பார்த்த, சூது கவ்வும், ஜிகர்தண்டா திரைப்பட நடிகரான கருணாகரன் அவரது மனைவி தென்றல் ஆகியோர், விவசாயி பாலனை தொடர்புகொண்டு, தங்களின் வேதனையை தெரிவித்து ஆறுதல் கூறியதுடன் அவருக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து, பாலனின் வங்கிக் கணக்குக்கு ரூ.1 லட்சத்தை நேற்று அனுப்பியுள்ளனர்.
ஆறுதல் கூறிய அமைச்சர்
தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சரான ஆர்.வைத்திலிங்கம் பாலனை, ஒரத்தநாடு அருகில் உள்ள வல்லம் புறவழிச்சாலைக்கு, கட்சி நிர்வாகிகள் மூலம் வரவழைத்து, ஆறுதல் கூறியதுடன், மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு இதுகுறித்து கவனம் செலுத்துமாறும் கூறியுள்ளார். வேறு உதவி தேவைப்பட்டால் கேட்குமாறும் கூறினாராம்.
கோட்டாட்சியர் விசாரணை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், ஒரத்தநாடு வட்டாட்சியர் தமிழ்செல்வி ஆகியோர் விவசாயி பாலன் குடும்பத்தினரின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்துகொண்டு, தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மார்ச் 12-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு பாலன் வந்து நடந்த விவரத்தையும், அதற்கான ஆவணங்களையும் அளிக்குமாறும் தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top