Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜெயலலிதா மவுனத்தின் மர்மம் என்ன?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மக்கள் நலக் கூட்டணியினர் உற்சாகமான பிரச்சாரங்களில் இருக்கின்றனர். திமுக கூட்டணிக் கணக்கை ஆரம் பித்துவிட்டது. வெகு விரைவில் தேர்தல் அறிக்க...
மக்கள் நலக் கூட்டணியினர் உற்சாகமான பிரச்சாரங்களில் இருக்கின்றனர். திமுக கூட்டணிக் கணக்கை ஆரம் பித்துவிட்டது. வெகு விரைவில் தேர்தல் அறிக்கையும் வந்துவிடும் என்கிறார்கள். பாஜக, பாமக இரண்டும் ஒருபுறம் தனித்தனிக் கூட்டணிகளை அமைக்கும் கோதாவில் இருந் தாலும், மறுபுறம் தேர்தல் பணிகளையே தொடங்கிவிட்டன.

தேமுதிக எந்தப் பக்கம் என்பதை இன்னமும் இறுதியாக அறிவிக்காவிட்டாலும், திமுக அல்லது பாஜகவோடு அது கை கோக்கும் என்பது ஊருக்கே தெரிந்திருக்கிறது. ஆனால், பிரதான கட்சியும் தேர்தல்களில் முந்திக்கொள்ளும் கட்சியுமான அதிமுக தரப்பிலிருந்து, கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த தேர்தல் முன்னோட்டக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “கூட்டணியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஜெயலலிதா பார்த்துக்கொள்வார்” என்று குறிப்பிட்டி ருக்கிறார். ஆனால், ஜெயலலிதாவோ அமைதி காக்கிறார். காங்கிரஸை அவர் பரம வைரியாக்கிவிட்டார். தேமுதிகவும் அந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட்டுகளும் தனிப் படகில் பயணம் கிளம்பிவிட்டனர். எதற்காகக் காத்திருக்கிறார் ஜெயலலிதா?
இது ஜெ. கணக்கு
எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவுக்கு இருந்துவரும் வாக்கு வங்கி, அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், திமுகவோடு ஒப்பிடும்போது என்றைக்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதிலும் கடந்த கால் நூற்றாண்டுத் தேர்தல்கள் அதிமுகவை மேலேயே கொண்டு வைத்திருக்கின்றன.

1991-ல் அதிமுக 44.4% வாக்குகளைப் பெற்றிருந்தது. 1996 தேர்தலில் கடுமையான எதிர்ப்பலை உருவாகியிருந்த சூழலில், திமுக – தமாகா கூட்டணி வென்றது. இத்தேர் தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 27.08% ஆகக் குறைந்தது. 

2001-ல் மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்த போது, அதிமுக 31.4% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2006 தேர்தலில் திமுகவிடம் தோற்றபோதும், முந்தைய தேர்தலைவிட அக்கட்சிக்கு 1.2% வாக்குகள் அதிகம் கிடைத்திருந்தன – 32.6% வாக்குகளை வாங்கியிருந்தது. 

2011 தேர்தலில் அதிமுக 38.4% வாக்குகள் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இப்படிச் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரங்களைத் தாண்டி, சமீபத்திய 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வென்றபோது அதன் வாக்கு வங்கி, 44.3% ஆக உயர்ந்திருந்தது. மறுபுறம், 23.6% வாக்குகளையே திமுக வாங்கியிருந்தது. ஜெயலலிதா மவுன மர்மத்தின் மைய ஆதாரம் இந்த வாக்குக் கணக்கு தரும் துணிச்சல்தான்.

சிதறும் கட்சிகளும் ரகசிய சிரிப்பும்
தமிழகத்தில் 1991-க்குப் பிறகு திமுக, அதிமுக என்று இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால், இந்த முறை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பெரிய அளவில் அரசியல் சூழலில் மாற்றங்கள் இல்லை.

இதனாலேயே 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு தொடர் வெற்றிகளைக் குவித்ததுபோல், இந்த முறையும் நடக்கும் என்று அதிமுகவினர் பேசிவந்தார்கள்.

ஆனால், வெள்ளத்துக்குப் பின் சூழல் மாறியது. தலைநகரிலும், கடலூர் – சிதம்பரத்திலும் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், மெத்தனமான ஆட்சி நிர்வாகம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள், நிவாரணப் பணிகளிலும் அதிமுக நிர்வாகிகள் நடத்திய கேலிக்கூத்துகள் பெரிய அளவில் அதிருப்தியை உருவாக்கின. எனினும், இந்த அதிருப்தியின் பலன்கள் எதிர்க் கட்சிகளைச் சென்றடையும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று நம்புகிறார் ஜெயலலிதா.

பிஹார் தேர்தலுக்குப் பின் நாடு முழுவதும் மகா கூட்டணி தொடர்பான சிந்தனைகள் வலுப்பெற்றபோதும் தமிழகம் நேர் எதிரான முடிவை நோக்கி நகர்ந்தது. இங்கே ஆளுங்கட்சிக்கு எதிரான கட்சிகள் திரளவில்லை. மாறாக, முன்பைக் காட்டிலும் மேலும் சிதறின. திமுக ஒருபுறம், கம்யூனிஸ்ட்டுகள் ஒருபுறம், பாமக ஒருபுறம், பாஜக ஒருபுறம் என ஆளுக்கு ஒருபுறம் திரும்பி நிற்கும் நிலையில், ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் தானாகச் சிதறும் என்று நினைக்கிறார். அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.

திமுக போனால் அதிமுக, அதிமுக போனால் திமுக எனும் சூழல் மாறி இரண்டுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்ற குரல்களை இந்த முறை அதிகம் கேட்க முடிகிறது. இந்தக் குரல்கள் சொற்பமானவை என்றாலும், அவை பொதுத் தளத்திலிருந்து ஒலிப்பவை என்பது முக்கியமானது. 

அதாவது, கட்சி வாக்கு வங்கியைத் தாண்டி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் வாக்குகள். அவைதான் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை எப்போதும் எதிர்க் கட்சிக்கு ஆதரவாகத் திருப்பிவிடக் கூடியவை. ஆனால், இந்தக் குரல்களில் பெரிய சேதாரம் இம்முறை ஏற்படும் வாய்ப்புகள் தெரிகின்றன. முக்கியமாக, மக்கள் நலக் கூட்டணி கணிசமான சேதத்தைத் திமுகவுக்குக் கொடுக்கக் கூடும்.
இப்படிப்பட்ட சூழலில், ஜெயலலிதாவின் முக்கிய மான கவனம் ஒரேயொரு விஷயத்தில்தான் இப்போது இருக்கிறது என்கிறார்கள். திமுக பக்கம் போய்விடாமல் தேமுதிகவைப் பார்த்துக்கொள்வது. திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வேறு விமர்சித்திருக்கிறார். 

திமுக கூட்டணியில் தேமுதிக சேராவிட்டால், காங்கிரஸ் ஓட்டுகளை இழுக்க தமாகா, தலித்துகள் ஓட்டுகளை இழுக்க இந்தியக் குடியரசுக் கட்சி, முஸ்லிம்கள் ஓட்டுகளை இழுக்க மனிதநேய மக்கள் கட்சி, வன்னியர் ஓட்டுகளை இழுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இப்படி சமூகங்கள் சார்ந்த சின்னச் சின்னக் கட்சிகளின் துணை போதும்; ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார் ஜெயலலிதா.

எண்களின் சாதகம்
எப்போதுமே கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைக் கறாராகப் பேச ஒரு வசனத்தைப் பயன்படுத்துவார் ஜெயலலிதா. “தோற்கும் ஐம்பதில் நிற்க வேண்டுமா, ஜெயிக்கும் ஐந்தில் நிற்க வேண்டுமா?” என்பதே அந்த வியூகம். சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்போது குறைந்தது 175 தொகுதிகளிலேனும் நிற்க முடியும். மூன்றில் இரு பங்கு இடங்களை இழந்தாலும் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று அவர் கணக்குப் போடுகிறார்.

சரி, ஒருவேளை தேமுதிகவை திமுக இழுத்துவிட்டால்? அப்போது கணக்கு மாறும். மேலும் சில கட்சிகளை அதிமுக குறிவைக்கும். அப்போது அணிகளையும்கூட அது தகர்க்கும் என்கிறார்கள். மவுனத்தின் மர்மம் விலகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top