Mohammed Farook Mohammed Farook Author
Title: விஜயகாந்த் வைக்கப்போகும் கூட்டணி எது…
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கூட்டணி யாருடன்?: விஜயகாந்த் குழப்பம் நீடிப்பு.... தமிழக சட்டமன்றத்துக்கு மே மாதம் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் ...
கூட்டணி யாருடன்?: விஜயகாந்த் குழப்பம் நீடிப்பு....

தமிழக சட்டமன்றத்துக்கு மே மாதம் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.

இதனால் சட்டசபையில் தே.மு.தி.க.வுக்கு அடுத்த இடத்தைத்தான் தி.மு.க.வால் பிடிக்க முடிந்தது. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

இதனால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்திருந்த தி.மு.க., தனது மனதை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அ.தி.மு.க. ஒரு அணியாகவும், மக்கள் நலக் கூட்டணி இன்னொரு அணியாகவும் களம் காணும் நிலையில் பா.ஜனதாவும் தனிக் கூட்டணி அமைக்க ஆயத்தமாகிறது.

பா.ம.க.வும் தனித்து போட்டியிடுகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில், காங்கிரசை மட்டும் கூட்டணியில் வைத்துக் கொண்டு வெற்றிக்கோட்டை எட்ட முடியாது என்கிற எண்ணமே தி.மு.க.வினர் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.

விஜயகாந்த்தை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க. கணக்கு போட்டுள்ளது. இதற்காக விஜயகாந்துக்கு தி.மு.க.வும், காங்கிரசும் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தன.

இதனை ஏற்றுக்கொண்டு தி.மு.க. அணியில் விஜயகாந்த் சேர்ந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதனை பொய்யாக்கும் விதத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பற்றி இணைய தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன என்று சாடி இருந்தார்.

தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பிரேமலதாவின் இந்த கருத்தால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே தேர்தல் கூட்டணி பற்றி இனி யாரும் வாய் திறக்க வேண்டாம் என்று தே.மு.தி.க.வினருக்கு விஜயகாந்த் கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டணி தொடர்பாக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கும் இது போன்ற கருத்துக்கள் கூட்டணிக்கு குந்தகம் விளைவித்து விடக்கூடாது என்பதற்காகவே விஜயகாந்த் இது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
தேர்தல் நேரங்களில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் எப்போதுமே விஜயகாந்த் மிகவும் கவனமுடன் செயல்பட்டே வந்துள்ளார். 2006–ம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவர் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி தே.மு.தி.க.தான் என்பதை நிரூபித்து காட்டினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களை பெற்று போட்டியிடுவதற்கு இதுவே உதவிகரமாக இருந்தது. எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் விஜயகாந்த் பெற்றார்.

அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் விஜயகாந்துக்கு பெரிய சறுக்கலாகவே இருந்தது.
தேர்தலின்போது வீசிய மோடி அலையை பயன்படுத்தி எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என கருதிய விஜயகாந்த் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் ஒரு இடத்தில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை.

அது போன்ற ஒரு நிலைமை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் தே.மு.தி.க.வினர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப கூட்டணி வியூகத்தை அமைக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்த்தை மீண்டும் சேர்க்கவும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை வருகை தரும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் பேச்சு நடத்துவார் என்று கூறப்படுகிறது.

அதே வேளையில் ஊழலுக்கு எதிராக விஜயகாந்த் கருத்து தெரிவித்து வருவதால் வைகோ தலைமையிலான மக்கள்நலக் கூட்டணியில் அவரை சேர்ப்பதற்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் தொடர்ந்து விஜயகாந்துடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.
இதனால் யாருடன் சேருவது என்று முடிவு எடுக்க முடியாமல் விஜயகாந்த் குழப்பத்தில் உள்ளார்.

காஞ்சீபுரத்தில் வருகிற 20–ந்தேதி நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றிய இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக விஜயகாந்த் அறிவிப்பார் அல்லது தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்கிற எண்ணத்தை சூசகமாக வெளிப்படுத்துவார் என்றே தே.மு.தி.க.வினர் காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top